October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் கொரோனா சமூகப் பரவல் நிலையில்’: சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை

இலங்கையின் பல பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ், சமூகப் பரவல் நிலையை அடைந்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை அடையவில்லை என்று தொடர்ந்தும் அரச தரப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்த நெருக்கடி நிலையைக் கையாள சுகாதாரத் துறையின் முறையான கண்காணிப்பு அவசியம் என்பதையும் அது வலியுறுத்தியுள்ளது.

சமூகப் பரவல் என்பது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணிகளுடன் எவ்வித தொடர்புமின்றி, வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்படுதல் என பரிசோதகர்கள் ஒன்றியம் அதனை வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா சமூகப் பரவல் நிலையில் இல்லையென அரசாங்கம் கூறிவந்தாலும், தாம் கீழ்மட்டத்தில் பணியாற்றும் போது கொத்தணிகளுடன் தொடர்பில்லாத கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறான நிலைமைகள் குறித்து சுகாதாரத் துறையினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.