file photo: Facebook/ Mahinda Rajapaksa
இலங்கை வருடமொன்றுக்கு 4,200 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுக் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மீதான இரண்டாவது வாசிப்பை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் இலங்கையை பாரிய கடன் சுமையில் சிக்க வைத்திருந்தாலும், தாம் இந்த வருடத்துக்குரிய கடன் அனைத்தையும் செலுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதற்கு முன்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களைப் பார்க்க, பொதுஜன முன்னணி அரசாங்கம் வித்தியாசமான சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பலவீனமான பொருளாதார நிலைமைகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருட காலப்பகுதியில் காணப்பட்ட சமூகப் பொருளாதார அழிவுப் பாதையை மாற்றியமைப்பதே ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் வரவு செலவுக் கொள்கை என்றும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டம் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.