November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

file photo: Facebook/Election Commission of Sri Lanka

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

19 ஆவது அரசியரலமைப்பு திருத்தத்தின் கீழ் 5 வருட பதவிக் காலத்தை கொண்டதாக 2015 நவம்பர் 13 ஆம் திகதி தற்போதைய தேர்தல்கள் ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இதற்கமைய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரியவும், குழுவின் உறுப்பினர்களாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் அபேசேகர உள்ளிட்டோர் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்களின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் புதிய ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆம் திருத்தத்துக்கு அமைய, புதிய ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

20 ஆம் திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதியினால் பெயரிடப்படும் உறுப்பினர்களின் பெயர்களை நாடாளுமன்ற பேரவைக்கு சமர்ப்பித்து, நாடாளுமன்ற பேரவை தமது ஆய்வை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த பின்னரே, தேர்தல் ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தான் ஓய்வு பெறவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

எனினும், புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தாம் அந்த பதவியை வகிக்க முடியும் என மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், தான் இந்த பதவியில் தொடர்ந்தும் இருக்க போவதில்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.