October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சிங்களவர்களால் ஆட்சிப்பீடமேறிய அரசு முஸ்லிம் இனவாதிகளிடம் சிக்கியுள்ளது’

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச அரசு, இன்று முஸ்லிம் இனவாதிகளிடம் சிக்கிக்கொண்டுள்ளது. இதிலிருந்து அரசு விடுபட வேண்டுமென ‘சிங்களே’ அமைப்பின் பொதுச்செயலாளர் மடில்லே பன்னலோக தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சிங்கள வாக்குகள் மூலம் ஆட்சி அமைத்த இந்த அரசு, தங்களுடைய பொறுப்பை மறந்துவிட்டு செயற்படுகின்றது. இதனால் சில சிக்கலான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

கொரோனாத் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களது மத அனுஷ்டானங்களுக்கு அமைய அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படுவதன் நோக்கம் என்ன?

இந்த நாட்டில் வாழும் ஏனைய மதத்தவர்களின் உடல்களையும் கொரோனாத் தொற்று சட்டத்துக்கு அமைய தகனம் செய்யும்போது ஓர் இனத்துக்கு மாத்திரம் எவ்வாறு முன்னுரிமை வழங்கிச் செயற்பட முடியும்?

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று கூறிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இனவாதிகளுக்கு மட்டும் இந்த அரசு எவ்வாறு நளினப்போக்கைக் கடைப்பிடிக்கின்றது என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்தார்.