January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா அடக்கம் தொடர்பான வர்த்தமானி வெளிவரும்வரை பொறுமை காப்போம்; இம்ரான் எம்.பி

கொரோனா வைரஸினால் மரணமாகும் முஸ்லிம்களின் ஜனாஸா அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி வெளிவரும் வரை அனைவரும் பொறுமை காப்போம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

‘கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை. அது குறித்து இன்னும் முடிவு எடுக்கப் படவில்லை என அரசு அறிவித்து விட்டது.எனவே அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தல் அல்லது வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரை வீணான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்வது சிறந்தது.

சில அமைப்புகளும் தனி நபர்களும் ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைத்து விட்டதாக பிழையான தகவல்களை பரப்பியதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இலங்கையில் ஜனாஸாவை வைத்து பேரினவாத அரசியல் நடாத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்த அரசியல் விளையாட்டிலிருந்து ஜனாஸா அடக்கத்துக்கு அனுமதியை பெற ஆளும் கட்சியினர், எதிர்கட்சியினர் மற்றும் சிவில் சமூகம் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது நன்கு திட்டமிடப்பட்ட ஏமாற்று நாடகமொன்று அரங்கேற்றப்படுகின்றதா ? என்ற சந்தேகம் எழுகிறது.

அரசு நினைத்தால் இதற்கான சிறந்த தீர்மானத்திற்கு வருவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. உண்மை என்னவென்றால் அரசு இது தொடர்பான விடயத்திற்கு இதுவரை வரவில்லை என்பதுதான் உண்மை.

சுகாதார துறையினரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாஸாவை அடக்கம் செய்யும் அனுமதியை வழங்க முடியும் என கூறும் அரசாங்கம், கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார துறை கூறியபோது அதை நடைமுறைப்படுத்தவில்லை.

ஆகவே இங்கு பிரச்சினை சுகாதார துறை அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.