November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் 2021 வரவு – செலவுத்திட்டம் 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது; டிசம்பர் 10 இல் வாக்கெடுப்பு

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அதேவேளை,அதனை 19 நாட்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்படவிருப்பதுடன், நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

நவம்பர் 23 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நிறைவுபெறும். அன்றையதினம் பிற்பகல் 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று கூடிய நாடாளுமன்றம் அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

வரவு – செலவுத்திட்ட விவாதத்தின்போது சபை அமர்வுகள் தினமும் 9.30 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 5.30 மணிவரை முன்னெடுக்கப்படும். நவம்பர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணிவரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக ஒதுக்கப்படவிருப்பதுடன், நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்காக முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10 மணி வரையும் நேரம் ஒதுக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.