October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை சிறைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; இதுவரை 134 பேருக்கு உறுதியானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சிறைச்சாலைகள் புதிய கொத்தணிகளாக மாறி வருவது பெரும் சவாலாக மாறியுள்ளது.

இதுவரை வெலிக்கடை, போகம்பர, மாத்தறை மற்றும் குருவிட்ட சிறைகளில் 132 கைதிகள் உள்ளிட்ட 134 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கண்டி, போகம்பர சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகளுக்கு இன்று கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அங்கு 7 கைதிகள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள நிலையில், அந்தச் சிறையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

இரத்தினபுரி, குருவிட்ட சிறைச்சாலையிலும் கைதி ஒருவர் இன்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மாத்தறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்த கைதி ஒருவருக்கும் ஏற்கனவே கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக கைதிகளைக் கொண்டுள்ள கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 100 கைதிகள் கொரோனாத் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுதவிர அங்கு சிறைப் பாதுகாப்பு விவரங்களுக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் விசேட பணி அதிகாரி ஒருவரும், சமையல்கார ஊழியர் ஒருவரும் கொரோனாத் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.