கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் மேல் மாகாணத்தில் இருந்து, மற்றைய மாகாணங்களுக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களை தடுப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு அங்கிருந்து வெளியில் வருவதற்கோ, வெளியில் உள்ளவர்கள் அந்தப் பிரதேசங்களுக்குள் செல்வதற்கோ இடமளிக்க வேண்டாமெனவும் ஜனாதிபதி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட் தடுப்பு செயலணி இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடி தற்போதைய நிலவரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, கொவிட் தொற்றால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளைப் போன்று எமது நாட்டிலும் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் 93 வீதமானவற்றுக்கு காரணம் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாகும் என்று இதன்போது வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருதய நோய், நீரிழிவு, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மிக வேகமாக கொவிட் நோய்த் தொற்றுக்கு உள்ளாகின்றனர்.
பெரும்பாலானவர்கள் நோய் அறிகுறிகள் இன்றியே மரணத்தை தழுவியுள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் போது அவர்கள் கொவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள ஜனாதிபதி, வேறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.