November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய, சீன பிரஜைகளுக்கும் கொரோனா; இலங்கையின் இன்றைய நிலவரம்

கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த 14 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50 பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி தொற்றாளர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில், தொழில் செய்யும் சீன அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது.

கொழும்பு துறைமுக நகரத்தில் கடமையாற்றுவோரில் 47 பேருக்கு கொ​ரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதில், சீன அதிகாரிகள் நால்வர் அடங்குகின்றனர்.

இதேவேளை, காலி முகத்திடலில் அமைந்துள்ள கோல் பேஸ் கிரினில் கடமையாற்றும் உள்ளூர் தொழிலாளர்களில் 50 பேர், பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு பணியாற்றும் சுமார் 200 பேர், இரத்மலானையில் தங்கியிருக்கும் நிலையில், அந்த இடமும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மெனிங் சந்தையை தற்காலிகமான இடமாற்ற நடவடிக்கை

புறக்கோட்டை மெனிங் சந்தையை எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அளவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

எனினும், மெனிங் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் புதிய இடம் ஒன்றிலேயே முன்னெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இதன்படி, பேலியகொடையில் அமைந்துள்ள அரச பொறியியல் கூட்டுத்தாபன கட்டட வளாகத்தில் மெனிங் சந்தை வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இதன்போது மொத்த விற்பனை நடவடிக்கைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடுத்துவரும் நாட்களில் மெனிங் சந்தையில் பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கையில் சிவில் பாதுகாப்பு படையினரின்ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு நடைமுறைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எனினும், புறக்கோட்டை மெனிங் சந்தையை தற்காலிகமாக பேலியகொடை பகுதிக்கு கொண்டுசெல்ல அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, மெனிங் சந்தை வர்த்தக சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

தங்களது கோரிக்கைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை எந்தவொரு வர்த்தகரும் தற்காலிக இடத்துக்குச் செல்ல ஆயத்தமில்லை என, சங்கத்தின் உப தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

646 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 646 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்கள்

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள

நபர்கள் ஆகியோரினால் அகற்றப்படும் மருத்துவ கழிவுகளை வெளியேற்றுவது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்காக தனியான வாகனங்களைப் பயன்படுத்துமாறு உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பாவனைக்குட்படுத்திய முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை மஞ்சள் நிற பையொன்றில் வேறுபடுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மீள்சுழற்சி செய்யப்படாத மருத்துவ கழிவுகளை முறையாக அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்

நாட்டில் நேற்று (10) கொரோனா தொற்றுக்குள்ளான பெரும்பாலானோர், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 430 பேர் நேற்றையதினம் அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் 251 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டிய பகுதியிலிருந்து 55 பேரும், கிரான்பாஸ் பகுதியிலிருந்து 32 பேரும்,

வாழைத்தோட்டத்திலிருந்து 25 பேரும், மாளிகாவத்தை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் இருந்து தலா 20 பேர் வீதமும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடையில் இருந்து 17 பேர், பொரள்ளையிலிருந்து ஆறு பேர் மற்றும் மட்டக்குளிய பகுதியிலிருந்து எட்டுப்பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புறக்கோட்டையில் 28 பேர், முகத்துவாரப் பகுதியில் 04 பேர், கொலன்னாவையிலிருந்து 07 பேர், மட்டக்குளிய பகுதியிலிருந்து 08 பேர் மற்றும் கல்கிஸை பகுதியிலிருந்து ஏழு பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்த அழைத்து சென்ற பஸ் விபத்து

நாடு திரும்பிய சில​ரை, தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்து சென்றுக்கொண்டிருந்த பஸ்ஸொன்று விபத்துக்குள்ளாகியது. அதில், காயமடைந்த சிலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, நாடு திரும்பிய சிலரை, அதி​வேக நெடுஞ்சாலையின் ஊடாக அழைத்துச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பஸ்ஸொன்றே, இவ்வாறு நேற்று (10) இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.