January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம்” : பிள்ளையான்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அலுவலகம், பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனால் (பிள்ளையான்) இன்று உத்தியோகப் பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருக்கும் அவருக்கு அந்தக் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு நீதிமன்றத்தினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தனது அலுவலகத்தை இன்று திறந்து வைத்து கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இதன்போது, அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், உதவி அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் பரவியுள்ள கொரோனா தொற்று நிலைமை அரச கொள்கைகளுக்கமைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கையெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மாவட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.