November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவிட்- 19 பரிந்துரைகளைப் பின்பற்றுமாறு இலங்கைக்கு வலியுறுத்தல்’

கொவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகளில் உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ள பரிந்துரைகளை இலங்கை பின்பற்ற வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரின் பிரேதங்களை எரிப்பதற்கு மாத்திரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறித்து அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அவதானம் செலுத்தியுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் கொவிட்- 19  தொடர்புடைய மரணங்களில் அடக்கம் செய்தல் மற்றும் தகனம் செய்தல் ஆகிய இருமுறைகளையும் பரிந்துரைத்துள்ளதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தென் ஆசிய அம்னெஸ்டி இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இலங்கையில் மத ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, பாதுகாக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தொலைவில் உள்ள தீவொன்றில் அடக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.