”தமிழ் தேசிய கூட்டமைப்பை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து, எங்களின் தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளோம்” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான ‘கருணா அம்மான்’ என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நாவிதன்வெளி, வேப்பையடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரதமரின் விசேட இணைப்பாளர் அலுவலகத்தை அவர் இன்று திறந்து வைத்தார்.
அங்கு உரையாற்றிய முரளிதரன், கடந்த பொதுத் தேர்தலில் தான் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தாலும், மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பை பிரதமர் தனக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்மூலம் தனக்கு கிடைக்கும் அதிகாரங்களை பயன்படுத்தி தேவையான மாற்றங்களை அம்பாறை மாவட்டத்தில் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே ‘கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றி வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அம்பாறை மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர்…இந்த நிலைமையில் எதிர்வரும் தேர்தல்களில் எம்முடன் இணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிட கோடீஸ்வரன் மற்றும் கலையரசன் ஆகியோர் முன்வர வேண்டும்’என்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.