இலங்கையில் கொரோனா மரணங்களை நகர்புறங்களில் அடக்கம் செய்வது உகந்ததாக இல்லாவிட்டால், தொலைவில் உள்ள தீவொன்றில் அடக்கம் செய்வது குறித்து அமைச்சரவையில் ஆராயப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இறுதி முடிவு சுகாதாரத் துறையினரால் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தொலைதூரத்தில் உள்ள தனிமைப்பட்ட பிரதேசமொன்றைத் தெரிவுசெய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாகவும் தெரியவருகின்றது.
இதேநேரம், ஜனாஸா நல்லடக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், கொவிட்- 19 காரணமாக உயிரிழந்தவர்களின் பிரேதங்களை அடக்கம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக வெளியான செய்தி தவறானது என்பதையும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, உயிரிழந்தவர்களை எரிப்பதை நிறுத்துமாறு தமக்கு எவ்வித பணிப்புரைகளும் வழங்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.