November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாய நடவடிக்கைக்கு இடையூறுகள் விளைவிக்கக்கூடாதென நீதிமன்றினால் தடையுத்தரவு

திருகோணமலையில் தொல்பொருள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ள தென்னமரவாடி மற்றும் திரியாய் பகுதிகளில், தமிழ் மக்களுக்குச் சொந்தமான விவசாயக் காணிகளில் விவசாயிகள் விவசாயம் மேற்கொள்வதற்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென உத்தரவிட்டுள்ள நீதிமன்றம், இடைக்கால தடையுத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இடைக்கால தடையுத்தரவை இன்று  பிறப்பித்த திருகோணமலை மேல் நீதிமன்றம், மனு மீதான விசாரணையை இம்மாதம் 23ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

தமிழ் மக்கள், பல நூற்றாண்டுகளாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த திரியாய் மற்றும் தென்னமரவாடி போன்ற பகுதிகளிலுள்ள விவசாயக் காணிகளை அளந்த தொல்பொருள் திணைக்களம், எல்லைக் கற்களையும் நாட்டியிருந்தது.

எல்லைக் கற்கள் நாட்டப்பட்டிருக்கும் காணிகளுக்குள் எவ்விதமான விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென தொல்பொருள் திணைக்களம், காணி ஆணையாளர் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தது. அத்துடன் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை தடுக்கும் நடவடிக்கைகளையும் பொலிஸார்  மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில், சட்டத்தரணி கிறிசாந்தினி உதயகுமார் மனுவொன்றை  இன்று தாக்கல் செய்திருந்தார்.

தாக்கல் செய்யப்பட்ட மனு ஆராயப்பட்டபோது, வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் ஆஜராகியிருந்ததுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுவை ஆராய்ந்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைக்கு எவ்விதமான இடையூறுகளையும் விளைவிக்கக்கூடாதென இடைக்கால தடையுத்தரவை விதித்து, மனு மீதான மேலதிக விசாரணையை, இம்மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.