கொழும்பின் பல பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு அரச உதவித் தொகைகள் முறையாக வழங்கப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை ஆராய்வதற்கு கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்- 19 வைரஸ் தொற்றால் கொழும்பு மாவட்டத்திலுள்ள மட்டக்குளி, முகத்துவாரம், கொட்டாஞ்சேனை தெற்கு ஆகிய பிரதேசங்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிரதேசங்களில் பி.சீ.ஆர் பரிசோதனைகள், சுகாதார பராமரிப்புகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்குவது பற்றி கரிசனை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார பிரச்சினையாக இருந்த கொரோனா தொற்று, இன்று பொருளாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10,000 ரூபா, 5000 ரூபா உதவித் தொகைகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தாலும், அவை முறையாக வழங்கப்படுவதில்லை என்பதையும் அவர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தாமதிக்காமல், வீடு வீடாகச் சென்று வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.