தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 14 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்றது.
நடராஜா ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள யாழ். சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அவரின் நினைவு தின நிகழ்வு நடத்தப்பட்டது.
ரவிராஜ் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, நினைவுச் சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் அமரர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
2006 நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பு நாரஹென்பிட்டிய – மனிங்டவுனில் உள்ள வீட்டின் அருகில் அடையாளம் தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ரவிராஜ் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.