யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை சர்வதேச தரம் வாய்ந்த கால்பந்தாட்ட மைதானமாக தரமுயர்த்த உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
துரையப்பா மைதானத்தை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
விளையாட்டு வீரர் என்ற வகையில் மைதானத்தில் காணப்படும் குறைபாடுகளை தாம் உணர்ந்திருப்பதாகவும், எதிர்வரும் சில வருடங்களுக்குள் இந்த மைதானத்தை தரமுயர்த்தி வட மாகாணத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுத்துறையை பொறுத்த மட்டில் வட மாகாணத்தில் துரையப்பா மைதானம் பிரதான கேந்திர நிலையம் எனவும், இந்த மைதானத்தில் செயற்கை தடகள ஓடுபாதையை அமைத்து மேம்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு இலங்கையில் லீக் கால்பந்தாட்டத் தொடரொன்றை நடத்தவுள்ளதாகவும் அப்போது வட மாகாணத்தின் பெரும்பாலான போட்டிகளை துரையப்பா மைதானத்தில் நடத்துவதே நோக்கம் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், துரையப்பா விளையாட்டரங்கிற்கென தனியான உடற் பயிற்சிக்கூடம் அமைக்கும் திட்டமும் இருப்பதாகவும். அதனூடாக வடக்கிலிருந்து திறமை வாய்ந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை வெளிக்கொணர முடியும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து யாழ். கூடைப்பந்தாட்ட அரங்கிற்கு விஜயம் செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் அங்கு கூடைப்பந்தாடினார்.
அமைச்சரின் இந்த விஜயத்தின் போது யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கிராமிய மற்றும் பாடசாலை அடிப்படை வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் தேனுக விதானகமே யாழ். நகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் ஆகியோரும் இணைந்துகொண்டிருந்தனர்.