
Twitter/ Namal Rajapaksa
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் முழு நாட்டையும் முடக்கும் தீர்மானத்தை அரசாங்கத்தால் எடுக்க முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் தகவல்களுக்கு அமையவே, அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் அதிகமாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் உள்ள தென்பகுதியில் இருந்து அமைச்சர்கள் வடக்குக்கு விஜயம் செய்கிறமை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ, அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் அதேவேளை நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ”பொது மக்களோ சுகாதார தரப்பினரோ பொருளாதாரம் முடங்குவதை விரும்பவில்லை. எதிர்க்கட்சியினரே அதனை விரும்புகிறார்கள். பொருளாதாரத்தை முடக்குவது தான் அவர்கள் நோக்கமாக இருக்கிறது. நாங்கள் அதை விரும்பவில்லை, பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.