யாழ்.மாவட்ட மக்கள் மேல் மாகாணத்துக்கான தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ். மாவட்டத்தில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அல்வாய் பகுதியில் மூன்று பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 1,419 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மூன்று கிராமங்கள் முடக்கல் நிலையில் காணப்படுகின்றன. அங்கு தற்போது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
முடிவுகளைப் பொறுத்து மிக விரைவில் அந்த மூன்று இடங்களும் விடுவிக்கப்படவுள்ளன.கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாசையூர் மற்றும் திருநகர் பகுதி ஆகியன தற்போது முடக்கல் நிலையில் உள்ளன.
இதனைவிட அரசின் அறிவிப்பின்படி தூர இடங்களுக்கான போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.தற்போது மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் போக்குவரத்தில் மிக அத்தியாவசியமான தேவையுடையோர் மாத்திரம் பயணம் செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம். ஏனென்றால் கொழும்பு அல்லது மேல் மாகாணம் போன்ற இடங்கள் அபாய வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசியமான தேவையுடையவர்கள் மட்டும் இந்தப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்.
அதேநேரத்தில், வடக்கு மாகாணத்துக்குள்ளான போக்குவரத்தில் எந்தவிதமான தடையும் இல்லை. எனினும், மிகவும் விழிப்பாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.