July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பொதுமக்களும் ஊடகங்களுமே காரணம்; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு பொதுமக்களும் ஊடகங்களுமே காரணம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் இலங்கையில் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து அதனை அரசாங்கம் கட்டுப்படுத்தியவேளை பொதுமக்களும் ஊடகங்களும தங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறினர்.இதன் காரணமாகவே நாடு தற்போதைய நிலையை எதிர்கொண்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட செயலணியினருடனான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சுகாதார துறையினருக்கு தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான திறன் உள்ளது. பொதுமக்களின் ஆதரவே அவசியம்.
கொவிட் தொற்றுநோய் என்பது ஒரு சுகாதார நெருக்கடி. மக்களை பாதுகாத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தவேண்டியது அரசாங்கத்தினதும் சுகாதார துறையினரினதும் அரசாங்கத்தினதும் பொறுப்பு. இலங்கையின் சுகாதார துறையிலும் மருத்துவ துறையிலும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

“கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 3 உள்ளன. ஒன்று ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது. மூன்றாவது நோயைக் கட்டுப்படுத்தும் அதேநேரம், நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் தற்போது மூன்றாவது மாற்று வழியைத் தெரிவு செய்திருக்கின்றோம்.

கொரோனாவை ஒழிக்க இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும், மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பாதுகாப்பது எனது பொறுப்பாகும்.

பி.சி.ஆர். பரிசோதனைக்காக அரசு நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது. மக்கள் இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.