இலங்கை சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு உலக சுகாதார அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியுடன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் அமைச்சின் அதிகாரிகள் இன்று கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போதே தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இணக்கப்பாடு தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக ஒதுக்க வேண்டிய நிதி, பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் தடுப்பூசி வழங்குவதற்கான வளங்களை ஒருங்கிணைப்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன் வைப்பதற்காக சுகாதார அமைச்சரால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள
கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 14,000 ஐ தாண்டியது
இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின்மொத்த எண்ணிக்கை 14,101 ஆக அதிகரித்துள்ளது.
107 கைதிகளுக்கு தொற்று
சிறைச்சாலைகளில் இது வரையில் 107 கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை மற்றும் பழைய போகம்பரை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் 70 பேர் பெண் கைதிகள் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மீன் வியாபாரியின் குடும்பத்திற்கு கொரோனா
பேலியகொட மீன் சந்தையில் இருந்து மீன் கொள்வனவு செய்து அம்பலாங்கொட பகுதியில் விற்பனை செய்த வியாபாரிக்கும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பௌர்ணமி தினத்தில் திலகபுர உதயகிரி விகாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் அவர்கள் கலந்து கொண்டநிலையில், விகாராதிபதி விகாரையினுள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த மீன் வியாபாரியுடன் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 595 பேர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 595 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாருக்கு சலுகைகள் வழங்க தீர்மானம்
மேல் மாகாணத்தில் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்ற நிலையை அடுத்து, பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பெண் பொலிஸாருக்கு சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் கர்ப்பிணிகளாக இருக்கும் மற்றும் 2 வயதுக்கும் குறைவான பிள்ளைகளை உடைய பெண் பொலிஸார், கடமைக்கு சமூகமளிக்காமல் வீடுகளில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை பதில் பொலிஸ்மா அதிபர் எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதன்படி, வீட்டிலிருந்தாலும் அவர்களுக்கு உரிய கொடுப்பனவுகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பொலிஸார் மற்றும் தனிமைப்படுத்தல், சுயதனிமையிலிருக்கும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மெனிங் சந்தைக்கு மறு அறிவித்தல் வரையிலும் பூட்டு
கொழும்பு, புறக்கோட்டை மெனிங் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான அச்சுறுத்தலான நிலைமை குறைவடைந்து சுகாதார பரிந்துரைகள் கிடைக்கும் வரை மெனிங் சந்தையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
15 ஆம் திகதி முதல் மாணவர்களுக்கு வீடுகளில் இருந்து கற்க வசதி
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் வாயிலான முன்னெடுக்கும் நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதுடன், அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களுடன் இதுபற்றி கலந்துரையாடியுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் முறைமை தொடர்பிலான தகவல்கள் கல்வியமைச்சினால் எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் தென்படாத தொற்றாளர்கள்
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் தென்படாத தொற்றாளர் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் அடையாளம் காணப்படும் அதிகளவானகொரோனா நோயாளர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் அறிகுறிகள் இன்றி தொற்றுக்கு உள்ளாகியிருப்பவர்கள் மூலம் மற்றையவர்களுக்கும் தொற்று பரவும் நிலைமை காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.