July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடுப்புக் காவல் கைதிகளை பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் யோசனை

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், பிணை வழங்க முடியுமானவர்களுக்குப் பிணை வழங்கும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தபுல டி லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்ரமரட்ணவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைத்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே சட்டமா அதிபர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை உட்பட சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வழிகாட்டல்களை வழங்குமாறு நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி, சட்டமா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதி அமைச்சரின் வேண்டுகோளுக்குப் பதிலளிக்கும் வகையில் சட்டமா அதிபர் பிணை மற்றும் குற்றப் பத்திரங்கள் தாக்கல் செய்வது தொடர்பாக புதிய வழிகாட்டல்களை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில், சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கும், ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரையில் 102 கைதிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.