வெளி மாவட்டங்களில் இருந்து அத்தியாவசிய தேவைகள் இன்றி கொழும்புக்கு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
ஆனபோதும் கொரோனா தொற்று பரவல் நிலைமையால் சில பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏனைய பிரதேசங்கள தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்காக அந்தப் பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் இல்லை என்று அர்த்தப்படாது என்றும், இதனால் வெளியில் வரும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.
வெளியில் வரும் போது, சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக மாத்திரம் கொரோனா தொற்று பரவலை தடுப்பது கடினம் என்றும், இந்த விடயத்தில் நாட்டு மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.