January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாணத்தில் இருந்து வருவோருக்கு மலையகத்திற்குள் நுழைய அனுமதியில்லை!

இலங்கையின் மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவல் அபாயமுள்ள பகுதிகளில் இருந்து மலையக பிரதேசங்களுக்கு வருபவர்களை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் உட்பட சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை தளர்த்தப்பட்டிருந்தாலும், வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துகொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அதேபோன்று, கொரோனா பரவல் அபாயமுள்ள பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வருகைத்தர வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து மலையகத்துக்கு வருகைதருபவர்களைக் கண்காணித்து, திருப்பியனுப்புவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கூட்டு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி, இன்று ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, தியகல, கலுகல பகுதிகளிலும், ஹட்டன்- கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை, பகத்தொழுவ பகுதிகளிலும் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதோடு, அத்தியாவசியக் காரணம் இன்றி மலையக பகுதிகளுக்கு செல்ல முற்படுபவர்கள் திருப்பியனுப்பப்படுகின்றனர்.

இதேவேளை மலையகத்திற்கு வெளி இடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுவதுடன், அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.