Photo: Facebook/Nalin Bandara
இலங்கையில் அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளது.
ஹரின் பெர்னாண்டோ, நளின் பண்டார, ஜே.சி.அலவதுவல, மாயந்த திசாநாயக்க மற்றும் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோர் மீதே இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவை அவமதித்து, அதன் அதிகாரத்தை சவாலுக்குட்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனை நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.
அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, நாட்டின் சட்டதிட்டங்களை மீறுவதற்காக தவறான நடத்தைகளுடன் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதாக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் இலஞ்ச அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இக்குற்றச்சாட்டு தமது அதிகாரங்களை சவாலுக்குட்படுத்தி, அவமதிப்பதாக அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய அவர்கள் 5 பேரும் இன்றைய தினத்தில் அரசியல் பழிவாங்கல் தொடர்பக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் உரிமைகளுக்காக செயற்பட்டுள்ளனர். இதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் நாங்கள் நீதிமன்றத்தை மதித்து நடந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த ஆணைக்குழுவை 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமித்திருந்தார்.
அரசியல் பழிவாங்கல் சம்பவங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் இறுதி அறிக்கையை இவ்வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.