January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீன – இலங்கை அரச தலைவர்கள் இணையவழி கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை’

Photo: Facebook/ Namal Rajapaksa

இலங்கை மற்றும் சீன அரச தலைவர்கள் இணையவழி கலந்துரையாடலொன்றில் பங்கேற்றதாக வெளியாகியிருந்த செய்தியை இலங்கைக்கான சீன தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் இணையவழி கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த கலந்துரையாடலில் இரு நாட்டு தலைவர்களும் நிர்வாக விடயங்களில் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதாகவும் அரச தரப்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த இணையவழி கலந்துரையாடலில் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் சாகர கரியவசம்  உள்ளிட்டவர்களும் பங்கேற்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, மேற்படி கலந்துரையாடலில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச தொடர்புத் துறையின் தலைவர் சாங் தாவோ, ஹைனான் மாகாணத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் லியு சிகுய் உள்ளிட்ட பல அதிகாரிகளும் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இலங்கைக்கான சீன தூதரகம் இது தொடர்பாக இன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டு, குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இரு நாட்டு தலைவர்களும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் அதிக ஈடுபாடுகள் காணப்படும் என்றும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.