
சர்வதேச ரீதியிலான போட்டிகளில் விளையாடுவதற்காக வடக்கிலிருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அலுவலகக் கட்டடத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் வடபகுதியில் விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதாக இதன்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் வட பகுதிகளில் இருந்து இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து வடக்கின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று, தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், யாழ். மாவட்டத்தில் உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் மைதானங்களை அமைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இனி வரும் காலங்களில் சர்வதேச ரீதியிலான போட்டிகளுக்கு வடக்கிலிருந்தும் இளைஞர்கள் தெரிவு செய்யப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் அமித் தேனுக விதானகமகே, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட், யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் மற்றும் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.