November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிசிஆர் பரிசோதனைகளுக்காக ஒரு நாளைக்கு 6 கோடி ரூபா செலவு’

கொவிட் -19 தொற்று நோயாளர்களை கண்டறிய மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளுக்காக நாளொன்றுக்கு 6 கோடி ரூபா செலவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதனால் இந்தப் பரிசோதனைகளுக்காக மாதம் ஒன்றுக்கு 160 கோடி ரூபா வரையிலான நிதியை ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸ் பரவலையடுத்து இதுவரை நாட்டில் 13,419 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டுக்குள் அதிகமான தொற்றாளர்கள் இருக்கலாம் என்பதால், பிசிஆர் பரிசோதனைகளை செய்வதன் மூலமாகவே அவர்களை அடையாளம் காண முடியும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

எனினும் ஒரு பிசிஆர் பரிசோதனைக்காக 6000 ரூபா செலவாகுவதாக கணக்கிடப்படுகின்றது.

வெறுமனே ஆய்வுக் கூடங்களின் உபகரணங்களை பயன்படுத்தவே இந்த தொகை செலவாகின்றது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

எனவே பிசிஆர் பரிசோதனைகளுக்கான செலவுகள் அதிகம். எனினும் தம்மிடம் மாற்று திட்டங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் பிசிஆர் முறைமையையே நம்பியிருக்க வேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அன்டிஜன் பரிசோதனைகளில் இந்த செலவு குறைவாகும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அடுத்த கட்டமாக அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்கவே அரசாங்கம் தீர்மானத்துள்ளது.

இப்போது நாட்டில் ஒரு நாளைக்கு சாதாரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இது வரையில் சுமார் 5 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பிசிஆர் பரிசோதனைகள் இலங்கையில் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்தார்.