மேல் மாகாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு, நாளை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படுமென இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
எனினும், கொழும்பின் சில பிரதேசங்கள் மற்றும் சில தொடர்மாடி குடியிருப்புகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மட்டக்குளி, முகத்துவாரம், வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை, வெல்லம்பிட்டி, ஆட்டுப்பட்டித் தெரு, பொரளை, புளுமெண்டல், கரையோர பொலிஸ் பிரிவு, மாளிகாவத்தை , தெமட்டகொட, கிராண்ட்பாஸ் ஆகிய 12 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும்.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு 9 ஆம் திகதி வரை நீடிப்பு
மட்டக்குளியின் மெத்சந்த செவன, மிஹிஜயசெவன, முகத்துவாரத்தின் ரண்முத்து செவன, கிராண்ட்பாஸின் முவதொர உயன, தெமட்டகொடையின் சிறிசந்த உயன, மாளிகாவத்தையின் தேசிய வீடமைப்புத் திட்டம் போன்ற தொடர்மாடிகளில் இருந்து எவரும் வெளியே செல்லவோ, எவரும் உள்ளே வரவோ அனுமதியில்லை என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, பேலியகொடை, கடவத்த, ராகம, நீர்கொழும்பு , பமுனுகம, ஜா-எல, சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக காணப்படும்.
‘ஊரடங்கு உத்தரவை நீக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்’ – இராணுவத் தளபதி
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை, இங்கிரிய பொலிஸ் பிரிவுகளும், வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக இருக்கும் என்றும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, குருநாகல் நகரசபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் குளியாப்பிட்டி பொலிஸ் பகுதிகள் ஆகியவையும் கோகலை மாவட்டத்தில் மாவனெல்லை மற்றும் ருவன்வெல்ல பொலிஸ் பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் யாரும் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.