இலங்கையில் நீண்டகாலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் விடுத்த கோரிக்கையை ஆதரிப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஆளும் ராஜபக்ஷ அரசாங்கத்தின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் ஆளுநருமான சுரேன் ராகவன், தமிழ் கைதிகள் விவகாரத்தில் அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகளை வெளிப்படுத்துமாறு நீதியமைச்சரிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜா, “நாங்கள் ஆதரவளித்த (நல்லாட்சி) அரசாங்கத்திடம் எத்தனையோ தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். கணிசமானவர்கள் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
ஆனால் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளவர்கள் பாரிய குற்றங்களை செய்தவர்கள் என்று சொல்லப்படுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.