இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இலங்கைக்கான குறுகிய கால விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சர் அரசாங்க தரப்பினர் மற்றும் தமிழ் அரசியல் தரப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .
இந்திய உயர்மட்ட அரசியல் பிரதானிகளுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அந்த சந்திப்புகள் சில காரணங்களால் நடைபெறவில்லை.
இந்நிலையில் சுப்பிரமணியம் ஜெய்சங்கரின் விஜயத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளதாகவும், அவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள், அரசியலமைப்பு ரீதியில் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுதல் மற்றும் 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தல் போன்ற விடயங்களில் இந்தியாவின் நேரடி தலையீடுகள் அவசியம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார்.