November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாஸா விவகாரம்: ‘முஸ்லிம்களின் உரிமைக்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும்’

photo: Facebook/ Organisation of Islamic Cooperation (OIC)

இலங்கையில் கொவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காமல், அடக்கம் செய்வதற்குள்ள உரிமையை இலங்கை அரசாங்கம் மதிக்க வேண்டுமென இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுத்து வரும் ஜனாஸா எரிப்புடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் உட்பட பல்வேறு மத சிறுபான்மையினராலும் பின்பற்றப்படும் நடைமுறையான, மரணித்தவர்களை அடக்கம் செய்வதைத் தடைசெய்து, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களை இலங்கை அரசாங்கம் எரிப்பதற்கு எடுத்துள்ள முடிவு கவலையளிப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

கொவிட்- 19 தொற்றுக்கு எதிரான அரசாங்கங்களின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கென உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கின்ற எந்தவொரு வழிகாட்டல்களின் கீழும், இலங்கை அரசாங்கத்தின் பலவந்தமாக எரிக்கும் நடவடிக்கை இல்லை என்பதையும் இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

நியாயமான காரணங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் ஜனாஸா எரிப்பை நிறுத்தி, முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.