January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சகல ஆலயங்களிலும் நாளை முதல் 10 நாட்களுக்கு விஷேட பிரார்த்தனை; நல்லை ஆதினம் வேண்டுகோள்

சகல ஆலயங்களிலும் நாளை 7ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் 10 நாள்களுக்கு நண்பகல் 12 மணி தொடக்கம் 10 நிமிடங்கள் மணி ஒலிக்கச் செய்து அனைத்து மக்களும் பிரார்த்தனை செய்வதற்கு ஆலய நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மதத்தலைவர்களும் இந்தப் பணியை முன்னெடுக்கவேண்டும் என்று நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கலாநிதி ஆறு திருமுருகன், ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதுதொடர்பில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதினம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கொரோனா எனும் ஆபத்தான நோயின் அவலம் 3ஆவது அலையாக அதிகரிக்கும் வேளையில் பொதுமக்கள் மிகக் கவனமாக பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.அனைத்து மக்களையும் காத்தருள சிவப் பரம்பொருளை முதற்கண் மன்றாடி, வேண்டுதல் செய்வதோடு,கீழ்வரும் நடைமுறைகளை பின்பற்றுங்கள்.

01.ஆலயங்களில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்த்து வீட்டில் அமைதியாகப் பிரார்த்தியுங்கள்.

02.ஆலயங்களில் நித்திய நைமித்திய பூஜை வழிபாடுகள் நடைபெறவேண்டும். அதற்கு இடையூறின்றி ஒத்துழையுங்கள்.

03.சிறுவர்கள், முதியோர், நோயாளர்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதை இயன்றவரை தவிருங்கள். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்.

04.சுகாதாரப் பகுதியினரின் அறிவுறுத்தல்களுக்கு அனைவரும் மதிப்புக் கொடுங்கள்.

05.நோயாளர்களுக்கு உதவும் மருத்துவத் துறையினரின் பாதுகாப்புக்கு அனைவரும் உதவுங்கள். அவர்களுக்காகவும் கடவுளை வேண்டுங்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.