மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், அப்படுகொலைக்கு நீதி கோரியும், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பணியாளர்கள் இன்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.
கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டுமென, அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன், உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்கள் கருப்புப் பட்டி அணிந்து, பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கொலை செய்யப்பட்ட கிராம அலுவலரின் மரணம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும், ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும், போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றிய, இலுப்பை கடவை கிராம அலுவலரான 55 வயதுடைய எஸ்.விஜியேந்திரன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடமை முடிந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், கள்ளியடி- ஆத்திமோட்டை பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.