July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் கைதிகள் விடயத்தில் சுரேன் ராகவன் உளமார செயற்பட்டால் ஆதரவளிப்பேன்; செல்வம் எம்.பி

அரசியல் கைதிகள் விடயத்தில், வட மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன்,  உளமாரச் செயற்படுவாராக இருந்தால், அவரின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவளிக்க நான் தயாராக உள்ளேன் என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் விடயம் குறித்து சுரேன் ராகவன் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பில், வவுனியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த செல்வம் எம்.பி,

“அரசியல் கைதிகள் விடயம் என்பது தற்போது எல்லோருக்கும் சாதாரணமாக இருப்பதாகத் தோன்றுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்துவதாகத் தெரிவிக்கும் சுரேன் ராகவன், உளமார இந்தக் காரியத்தில் ஈடுபடுபவராக இருந்தால்,  அவரின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவளிக்க தயாராக உள்ளேன்.

அத்துடன், சுரேன் ராகவன் எம்.பி, தற்போதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இருப்பவர் எனச் சுட்டிக்காட்டிய அவர், அக்கட்சியின் இன்றைய தலைவரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக இருந்தபோது, கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரனின் விடுதலை குறித்து வாக்குறுதி அளித்துச் சென்றிருந்தார் எனவும் ஆனால், இன்றுவரை சுதாகரன் விடுதலை செய்யப்படவில்லை.

“அரசியல் கைதிகளை விடுதலை செய்ய நீதி அமைச்சருக்கு அதிகாரமில்லை. ஆகவே, அவருக்குக் கடிதம் எழுதுவதை விட, ஜனாதிபதியிடம் தற்போது குவிந்து கிடக்கும் அதிகாரங்களைக் கொண்டு, ஜனாதிபதியுடன்  கலந்துரையாடி, அரசியல் கைதிகளுக்கு விடுதலையைப் பெற்றுத்தந்தால் அதை நாங்கள் வரவேற்போம். அதைவிடுத்து, அரசியல் நோக்கத்துக்காக நீதி அமைச்சரிடம் நியாயம் கேட்பது அர்த்தமற்றது.

தமது உயிரை இந்த மண்ணுக்காகத் தியாகம் செய்த போராளிகளை அவர்களது நினைவு நாளான நவம்பர் 27ஆம் திகதி நினைவுகூர அனுமதியை பெற்றுத்தர வேண்டுமெனவும் அவ்வாறு அனுமதியை சுரேன் ராகவன் பெற்றுத்தந்தால், அவருக்குப் பின்னால் நாங்கள் அணி திரள தயாராகவுள்ளோம் என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி மேலும் தெரிவித்தார்.