January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா : வார இறுதியில் ஒன்று கூடல்களுக்கு தடை – இலங்கையில் இன்றைய நிலவரம்

வார இறுதி நாட்களில் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், வார இறுதியில் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ் வீதி தடைகளுடனான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வார இறுதி நாட்களில் கூட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இல்லாத பிரதேசங்களுக்கும்  மேற்குறிப்பிட்ட விடயங்கள் பொருந்தும் என்றும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

விடுமுறை நாட்களில் பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், அதனூடாக கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் 213 பேருக்கு தொற்று

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 12,780 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணிகளின் ஊடான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9305 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும் 563 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் 563 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,186 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களில் 5568 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இதேவேளை நாட்டில் நேற்று  383 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும், மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணியில் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கை மீறிய 2532 பேர் கைது

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இதுவரையில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் ஊரடங்கு ஒழுங்கு விதிகளை மீறிய  139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 26 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேபோன்று முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட காரணங்களுக்காக நேற்றைய தினத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பாக இதுவரையில் 96 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  இவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 32 பேருக்கு கொரோனா தொற்று

பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில், இதுவரை 32 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு 20 குழந்தைகளும், 12 தாய்மார்களும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவருக்கும் தொற்று இருப்பதாகவும், ஆனால் அந்த வைத்தியருக்கு வைத்தியசாலைக்குள் வைத்து தொற்று ஏற்படவில்லை என்றும் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால் வைத்தியசாலைக்கு வருவோர் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வைத்தியசாலைப் பணிகள் வழமைப்போன்று இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் 199 பொலிஸாருக்கு தொற்று

மேல் மாகாணத்தில் இன்று  வரை 199 பொலிஸ் அதிகாரிகள், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 258 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன்,  1,350 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தலாத்துஓயா நகர் மூன்று தினங்களுக்கு  மூடப்படும்

தலாத்து ஓயா நகரை அண்மித்தப் பிரதேசங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், பொதுச் சுகாதார பரிசோதகர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக வர்த்தக நிலையங்கள் நாளை முதல் மூன்று தினங்களுக்கு மூடப்படவுள்ளது.

முகக் கவசம் அணிவது கட்டாயம்

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் மக்கள் அவதியுறும் இந்த நேரத்தில் இலங்கையின் வளிமண்டலத்திலுள்ள காற்று மாசடைவினாலும் பாதிப்பு ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளிமண்டலத்தில் மாசுத்தன்மை காணப்படுவதாகத் தேசியக் கட்டட ஆராய்ச்சி அமைப்பின் காற்றுத்தரப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து மாசுபட்ட காற்று இலங்கையின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளதாக  காற்றுத் தரப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கை, பருவ மழை நிலையை கொண்டிருப்பதால், பல நாடுகளிலிருந்து வீசுகின்ற காற்று இலங்கை நோக்கி வருவதன் காரணமாக வளிமண்டலம் மாசு படுகின்றதென அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

காற்றின் தரக் குறியீடு தற்போது 90—150 வரம்புக்கு இடையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்கள் 2020 ஓக்டோபர் 27ஆம் திகதி முதல் மோசமான காற்று மாசுக்குள் சிக்கியுள்ளன.

இந்த நிலை மேலும், சில நாட்களுக்கு நீடிக்கக் கூடும் என்பதால் சுவாச நோய் உள்ளவர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் சகலரும் முகக் கவசங்களை அணிவது அவசியமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி விசாரணையில் சிக்கல்

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா பரவியமை தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் இந்த சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களிடம் வாக்குமூலங்களைப் பெற வேண்டியுள்ளதால், இந்தப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் இந்த விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, களுத்துறை மாவட்டம் மத்துகம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பதுகம புதிய குடியேற்றப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, இப்பகுதி அண்மையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.