January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கான கூட்டம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்காக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கும் தேசிய திட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்றைய இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு, வாழ்வாதார மேம்பாட்டு குழு, உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு மற்றும் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு என்பன அதில் அடங்குகின்றன.

இதற்கமைய கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இன்று நடத்தப்பட்டது.

இதன்போது, இந்த மாவட்டங்களின் பொது வசதிகள், வீட்டுவசதி, மின்சாரம், குடிநீர், சுகாதாரம், நீர்ப்பாசனம், போக்குவரத்து மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தற்போதைய முன்னேற்றம், எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

This slideshow requires JavaScript.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர்  பி.எம்.எஸ் சால்ஸ் மற்றும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அமைச்சர் நிமல் லான்சா, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன்  சி.வி.விக்னேஷ்வரன், சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகிய எம்.பிக்களும் மற்றும் யாழ், கிளிநொச்சி மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.