January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கழிவுப் பொருட்கள்

File Photo: Facebook/portsauthority

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த மேலும் 82 கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை இன்றைய தினத்தில் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இலங்கையின் தனியார் நிறுவனமொன்றின் ஊடாக, பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என்ற போர்வையில் 2017ஆம் ஆண்டில் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய 247 கொள்கலன்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

இவற்றில் 130 கொள்கலன்கள் கட்டுநாயக்க பகுதியிலுள்ள நிறுவனமொன்றின் வளாகத்திலும், 111 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திலும் வைக்கப்பட்டிருந்தன.

கொள்கலன்களில் இருந்த கழிவுகள்

இது தொடர்பாக நாட்டில் சுற்றாடல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் அவற்றை மீண்டும் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி  20 கழிவுக் கொள்கலன்கள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதுடன், இன்றைய தினத்தில் மேலும் 82 கொள்கலன்களை திருப்பி அனுப்ப நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று  காலையில் 65 கொள்கலன்கள் கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டதுடன், மாலையில் 10 கொள்கலன்களும் இரவு நேரத்தில் 07 கொள்கலன்களும் திரும்பி அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த கழிவுக் கொள்கலன்களைச் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்த நபர்களிடம் விசாரணை மேற்கொள்ள தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.