
(File photo)
ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? இல்லையா? என்பதனை 20 நிமிடங்களில் கண்டறியக் கூடிய பரிசோதனைக் கருவிகளை இலங்கையில் பயன்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது.
இந்தக் கருவிகள் ஊடான பரிசோதனைகள் மூலம் தொற்றாளர்களை விரைவில் அடையாளம் காண முடியுமாக இருக்கும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனக் கூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பீசீஆர் பரிசோதனைகள் ஊடாகவே தொற்றாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் பீசீஆர் பரிசோதனைகளுக்கு அதிக நேரம் எடுப்பதால், குறைந்தளவான நேரத்தில் தொற்றாளர்களை அடையாளம் காணக் கூடிய பரிசோதனை முறைக்குள் செல்வது தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்படி உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள, 20 நிமிடங்களில் முடிவுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய 2 இலட்சம் பரிசோதனைக் கருவிகள் தற்போது கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் இரசாயனக் கூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் 8 இலட்சம் கருவிகள் அடுத்த வாரமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கருவிகள் மூலம் முதலாவதாக, முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கீழுள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று வைத்தியர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.