இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
மரணித்தவர்களில் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு-2 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் கொரோனா வைரஸ் உறுதிபடுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, நீண்டகாலம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு- 12 பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை இனங்காணப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு-14 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதோடு, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.