தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்கினாலும், தனிமைப்படுத்தல் செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஊரடங்கு சட்டத்தை நீக்கினாலும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்தும் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் 213 பேருக்கு தொற்று
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 213 பேர் இன்றைய தினத்தில் இது வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை 12,400 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணிகள் ஊடாக தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 8,922 ஆக உயர்வடைந்துள்ளதாக கொவிட் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவரும் அவர்களின் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 7 பேருக்கு தொற்று
கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் 6 பேருக்கும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு பெண் கைதிகளுக்கும், இரண்டு ஆண் கைதிகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் 180 பொலிஸாருக்கு தொற்று
மேல் மாகாணத்தில் இதுவரை 180 பொலிஸார் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் 257 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 1,302 பொலிஸார் சுயதனிமையில் இருப்பதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் 4 பேருக்கு தொற்று
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குறித்த நால்வரும் அங்கு பணிபுரியும் சாரதிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பினை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றும் 37 பேரை அவர்களது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களம் – மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திலும் தொற்று
சுங்கத் திணைக்களத்தின் 8 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவறான தகவல் வழங்கிய தொற்றாளர்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஒருவர், தனியார் மருவத்துமனையில் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்ட போது தவறான தகவல்களை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை பிசிஆர் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
எனினும், அவர் தனது முகவரி, தொடர்பு கொள்ளும் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியுள்ளதால், அவரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பவர்கள் முதலில் சுயதனிமையில் இருந்தவாறு, தமது நோய் அறிகுறி குறித்து பகுதிக்குப் பொறுப்பான சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொற்றிலிருந்து மேலும் 765 பேர் குணமடைந்தனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,623 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 765 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் தமக்கு உடனே தகவல்களை வழங்குமாறு சட்டமா அதிபர் தப்பல டீ லிவேரா, பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுவரை ஆடைத் தொழிற்சாலை கொத்தணி தொடர்பில் எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதை தான் கண்காணித்ததாகவும் சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளாரென, சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
திணைக்களங்களில் சுற்றுநிரூபம் புறக்கணிப்பா?
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பான அரசின் சுற்றுநிரூபத்தை மட்டக்களப்பிலுள்ள சில திணைக்களங்கள் புறக்கணிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் தனக்கு அறியத்தருமாறு மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் பணித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்டத் தகவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகின்ற நிலையில், அரச திணைக்களங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, வீட்டிலிருந்தவாறே பணி செய்வதற்கு ஏற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றுநிரூபம் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மட்டக்களப்பில் சில திணைக்களங்களில் இந்நடைமுறை பின்பற்றப்படாமல் சகல உத்தியோகத்தர்களும் முழுநேரக் கடமைபுரியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
தூர இடங்களில் இருந்தும், பொதுப் போக்குவரத்துகள் மூலம் கடமைக்கு வருபவர்களும், கர்ப்பிணிகளும் இவ்வாறான சூழ்நிலையில் முழுநேரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் செயற்பாடாகுமா?
எனவே, திணைக்களத் தலைவர்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, சுற்றுநிரூபத்துக்கு அமைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டியில் இதுவரை 45 தொற்றாளர்கள்
கண்டி மாவட்டத்தில் இதுவரை 45 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கங்கவட்டகோரள, உடபலாத, பாத்ததும்பர, தொலுவ, மெததும்பர, யட்டிநுவர, உடதும்பர, துன்பனே, ஹரிஸ்பத்துவ, மினிபே, அக்குறனை மற்றும் தலாத்துஓயா ஆகிய பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை
கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுடைய 9000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால், வைரஸ் தொற்றாளர்களை கண்டறிவது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் தற்போது 60,000 க்கும் அதிகமானோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இவர்களை சமூகமயப்படுத்துவதற்கு முன்னர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டது.
புதுமணத் தம்பதிக்கு கொரோனா
மாவனெல்ல நகரில் கடந்த மாதம் 9 ஆம் திகதி திருமணம் முடித்த புதிய ஜோடிக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவனெல்ல பிரதான சுகாதார வைத்திய அதிகாரி கெமுனு விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த திருமண நிகழ்வில் 120 பேர் வரை பங்குப்பற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த திருமண நிகழ்வு முதல் நாள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய நடத்தப்பட்டிருந்தாலும், இரண்டாவது நாள் நிகழ்வு எவ்வித சுகாதார பாதுகாப்புமின்றி நடத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி கெமுனு விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மணமகன் கொழும்பு பிரதேச பொலிஸ் நிலையமொன்றில் கடமையாற்றுவதாகவும் அந்த திருமண நிகழ்வில் கொழும்பிலிருந்து பலர் கலந்துகொண்டதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கேகாலை மாவட்டத்தில் இதுவரை 151 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் 170 தொற்றாளர்கள்
நேற்று அடையாளம் காணப்பட்ட 443 தொற்றாளர்களுள் 170 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் 138 பேர் மட்டக்குளி மோதர உயனவையும், 11 பேர் துறைமுகத்தையும், 21 பேர் கொழும்பு வடக்கையும் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பத்தரமுல்ல, ஹங்வெல, கொலன்னாவ,அங்கொட, அத்துருகிரிய ஆகிய பிரதேசங்களிலிருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஹட்டனில் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி
ஹட்டன், தும்புருகிரிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எஸ்.எஸ். மெதவல தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த நபருடன் தொடர்பை பேணிய 6 குடும்பங்களைச்சேர்ந்த 18 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் கடந்த 2 ஆம் திகதி ஹட்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றுக்கு சென்றுள்ளார். இதனால் அந்நிறுவனத்தின் வளாகம் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியாவில் தனியார் மருந்தகம் மூடப்பட்டது
மஸ்கெலியா நகரிலுள்ள தனியார் மருத்துவ சிகிச்சை நிலையமொன்றும், மருந்தகமொன்றும் (பாமசி) இன்று மூடப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியர் ஒருவர் உட்பட ஊழியர்கள் சிலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள 41 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்தே மஸ்கெலியா நகரில் அவர் மருந்து எடுக்க சென்ற தனியார் வைத்திய நிலையமும், மருந்துகளை வாங்க சென்ற பாமசியும் இவ்வாறு இன்று மூடப்பட்டன.
வைத்தியர் ஒருவரும், பாமசியில் தொழில் புரிந்தவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.