January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகை 25 பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது’

இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களிலும் எந்த நேரங்களிலும் அதிகபட்சமாக 25 நபர்களே அனுமதிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ. பீ. எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல்களில் பேணப்பட வேண்டிய கொவிட்- 19 கட்டுப்பாடுகள் தொடர்பாக பள்ளிவாசல்களின் பொறுப்பாளர்களுக்கு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வரையறையைப் பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாசல்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமது தற்துணிவின் பேரில் பள்ளிவாசல்களை மூடிவிடுவதற்கும் அனுமதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரக மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைகளை பள்ளிவாசல்களில் மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இலங்கை வக்பு சபையின் மறு அறிவித்தல் வரை மூடப்படல் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.