கொரோனா வைரஸ் பரவலிருந்து பாதுகாப்புத் தேடி, நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில், யாழ்ப்பாணம், பாணங்குளம் நாச்சி அம்மன் ஆலயம், காரைதீவு அருள்மிகு ஸ்ரீ காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் மற்றும் யாழ். நகர் மொகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடுகளும், தூஆப் பிரார்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் கீழ், புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதிலுமுள்ள மதத்தலங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு மக்கள் அனைவரும் தொற்றிலிருந்து விடுபட வேண்டியும், நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் இந்தப் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழிபாட்டில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் மாவட்ட செயலக கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை காரைதீவு அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற வழபாட்டு நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே .ஜெகதீஸ்வரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சீ. ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் மற்றும் பொது அமைப்புக்களின் தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.