
கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கை மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
கடற்றொழில் நடவடிக்கைகளை தொடர முடியாது மீனவர்கள் பொருளாதார நெருக்கடி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
கொழும்பு, பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா கொத்தணியே மீன்பிடித் தெழில் பாதிப்படைய காரணமாக அமைந்துள்ளதாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேண்டிக்ஸ், மினுவங்கொடை கொத்தணிகளைத் தொடர்ந்து வந்த பேலியகொடை மீன் சந்தைக் கொத்தணி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்களின் பொருளாதார நிலையை, பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொரோனா பரவல் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது.
நன்றாக சமைக்கப்பட்ட மீனை உட்கொள்வதால் கொரோனா பரவல் ஏற்படாது என்று சுகாதார அமைச்சு மக்களை அறிவுறுத்தியிருந்தாலும், மீன் விற்பனையாளர்களால் கொரோனா பரவுகின்றது என்ற அச்சமும் மீன்பிடித் துறையின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், கடந்த ஒரு மாத காலமாக கடலுக்கு செல்ல முடியாமையால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் திருக்கோவில் என கிழக்கு மாகாண ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பாரிய படகுகளை நிறுத்தி வைப்பதற்கு இடமின்றி கனரக இயந்திரங்களுக்குக் கட்டணம் செலுத்தி, கடற்கரையோரங்களில் இழுத்து நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் படகுகள் சேதமடைவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரதான கடற்றொழில் இறங்குதுறையாக ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் காணப்படுகின்ற போதிலும், கடந்த சில மாதங்களாக அதன் நுழைவாயிலில் மண் நிரம்பியுள்ளதால் மீன்பிடி நடவடிக்கைகளைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
23 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கிழக்கு மாகாண கடற்றொழில் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையக் காரணமாக அடைந்துள்ள ஒலுவில் துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கரையோர மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் சங்கம், கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மீனவ அமைப்புகள் என்பன மீன்பிடித்துறை அமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.