July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊரடங்கு உத்தரவை நீக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்’ – இராணுவத் தளபதி

இலங்கையின் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 9 ஆம் திகதியின் பின்னர் நீடிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையின்படி, மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியுடன் நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும்  ஊரடங்கு உத்தரவுகளை அமுல்படுத்தி, முழு நாட்டை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் தம்மைப் பாதுகாத்துக்கொள்வது பொதுமக்களின் பொறுப்பாகும் என்றும் அதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.