கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வரை நாட்டை முடக்கி வைக்க போவதில்லை என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து இயல்பான வாழ்க்கை முறையை மக்கள் தொடர தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
‘ தற்பொழுது அமுலில் உள்ள ஊரடங்கினால் மாத சம்பளம் பெறுபவர்களை விட, நாளாந்தம் கூலிக்கு வேலை செய்பவர்களே அதிகம் பாதிப்படைந்துள்ளனர்.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் மக்கள் வீடுகளில் இருக்கின்றார்கள்.அதேபோன்று தொடர்ந்தும் சுகாதார அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்றினால் எந்த பிரச்சினைகளும் இன்றி நாட்டை முன்கொண்டு செல்லமுடியும்.
மேலும்,சுகாதார நடைமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்ற விடயங்களை மக்களுக்கு சரியாக அறிவுறுத்த வேண்டும்.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாட்டை முடக்கினால் நாளாந்த உழைப்பாளர்கள் மீண்டும் தங்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பல வருடங்களாகும். அதனால் நாட்டை முடக்க முடியாது.
ஜனாதிபதியானாலும் அமைச்சர்களானாலும் யாராக இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.