கொழும்பு 13, பிரதேசத்தை சேர்ந்த 79 வயதுடைய பெண்ணொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இலங்கையில் கொரோனாவின் பலி எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த பெண் சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமான காலமாக வீட்டில் நோய் வாய்ப்பட்ட நிலைமையில் இருந்ததுடன், நீண்டகால நோயினால் அவர் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
மேலும், கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, இலங்கையில் 24 ஆவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய நபர் ஒருவர் வீட்டில் தவறி விழுந்ததில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த நபரின் மரணம் கொரோனா தொற்று காரணமாக ஏற்படாத காரணத்தினால் அதனை கொவிட் 19 மரணமாக கருத முடியாது என சுகாதார சேவை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.