November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கொரோனா: தொற்றாளர் எண்ணிக்கை 12000 -ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 12,000 ஐ கடந்துள்ளது.

இன்றைய தினத்தில் இது வரையில் 274 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 12,018 ஆக உயர்வடைந்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 5858 பேர் குணமடைந்துள்ளதுடன், 6097 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடாளுமன்ற செய்தியாளர்களுக்கு தொற்று

நாடாளுமன்ற செய்தியாளர்கள் இருவருக்கு இன்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளான நாடாளுமன்ற செய்தியாளர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவராவார். ஆங்கிலப் பத்திரிகையைச் சேர்ந்த ஓரு ஊடகவியலாளர் முதன்முதலாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

அவருக்குப் பின்னர் இரண்டு சிங்களப் பத்திரிகைகளை சேர்ந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கும், தமிழ்த் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இவர்கள் அனைவரும் 21, 22 ஆம் திகதிகளில் நடைபெற்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதம், வாக்கெடுப்பின் போது அங்கு சென்றிருந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

https://tamilavani.com/srilanka/7600/

கொழும்பு மாவட்டத்தில் 2000 ற்கும் மேற்பட்டோருக்கு தொற்று

கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 2003 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 3598 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 297 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், மேல் மாகாணத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 5898 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள 23 மரணங்களில் 12 மரணங்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக  மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamilavani.com/srilanka/3529/

மினுவாங்கொட தொற்றுடன் தொடர்புடைய 2000 பேர் குணமடைந்தனர்

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊடாக பரவிய கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் இதுவரையில் 2000 பேர் வரையிலானோர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று 409 புதிய தொற்றாளர்கள் பதிவு

திவுலுப்பிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் நேற்று 409 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 401 பேர் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏனைய 8 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள்.

இதனையடுத்து, மினுவாங்கொட – பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 8266 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 409 தொற்றாளர்களுள் 146 பேர் கம்பஹா மாவட்டத்தையும், 122 பேர் கொழும்பு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்று கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தம்புள்ளயில் மரக்கறி விலை உயர்வு

தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தில், மேல் மாகாணத்தை சேர்ந்த வியாபாரிகள் அதிகளவில் மரக்கறிகளை கொள்வனவு செய்தமையால் மரக்கறி விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நாட்களை விட இன்று காலை தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு அதிகளவில் வந்திருந்த மேல் மற்றும் தென் மாகாண வியாபாரிகள் மரக்கறிகளை கொள்வனவு செய்துள்ளனர்.

இதன்போது, வியாபாரிகளிடம் காணப்பட்ட வரையறுக்கப்பட்ட கையிருப்புகளை அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளதால் மரக்கறி விலை அதிகரித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு கோரிக்கை

நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நடவடிக்கைகளை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நுவரெலியா சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக நுவரெலியாவிலுள்ள நீதிமன்றத்துக்கு வந்து சென்றதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹொரன தொழிற்சாலையில் 23 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மூடப்பட்ட ஹொரணபிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து மேலும் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையில் பணிபுரியும் 450 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதன்போது 250 பேரின் அறிக்கை கிடைத்துள்ளதுடன், அவற்றில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 63,600 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில்  63,600 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் மொத்தம் 2452 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.ஆர்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல மேல் மாகாணத்தில் 11,900இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார நடைமுறைகளை மீறிய 75 பேர் கைது

முகக்கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 75 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று தெரிவித்துள்ளார்.

முகக் கவசத்தை அணியுமாறு மக்களை வலியுறுத்தும் பொலிஸார்

கடந்த மாதம் 15 ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயமானதாகும்.

பேலியகொட கொரோனா கொத்தணிக்கு நாணயத்தாளே காரணம்

ஆடைதொழிற்சாலை கொரோனா வைரஸ் கொத்தணியின் உப கொத்தணியான  பேலியகொட மீன்சந்தை  தொற்று பரவலுக்கு நாணயத்தாள்களே காரணமென தெரியவந்துள்ளது.

சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த மீன்சந்தையில் மீன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் எச்சில் மூலமும் இத்தொற்று பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, பேலியகொட உப கொத்தணி ஊடாக கடந்த 13 நாள்களில் 5,513 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை விற்றவர் கைது

வாடகைக்கு வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை வேறு நபருக்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, பண்டாரகம பிரதேசத்தில் சந்தே நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை 12000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப்படையின் 3 முகாம்கள் முடக்கப்பட்டன

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்கள் முடக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, களுபோவில, ராஜகிரிய மற்றும் களனிஆகிய இடங்களிலுள்ள பொலிஸ் விசேட படையின் முகாம்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட படை வீரர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொரளையில் 41 பொலிஸாருக்கு கொரோனா

பொரளை பொலிஸ் நிலையத்தின் 41 பொலிஸாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கமைய பொரளை பொலிஸ் நிலையத்தின் 56 பொலிஸார் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை மொத்தமாக 200க்கும் மேற்பட்ட பொலிஸார் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கல்வியமைச்சு கட்டடம் நாளை திறப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட பத்தரமுல்லயில் உள்ள இசுறுபாய கட்டடம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதிக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் வந்து சென்றுள்ளமை கண்டறியப்பட்டமையைத் தொடர்ந்து இசுருபாய கட்டடம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.

மேலும், குறித்த கட்டடத்தில் தொற்று நீக்கும் நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டவுடன், மீண்டும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பொகவந்தலாவை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா

பொகவந்தலாவை, கொட்டியாகலை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 2 ஆம் திகதி இரண்டாவது தடவையாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.

பேலியகொடை மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்ட நபரொருவர் அண்மையில் கொட்டியாகலை பகுதியிலுள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.

அவருக்கு வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த உறவினர்கள் மூவருக்கே வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது

நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு பிரிவின் பொறியியல் பிரிவு அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள பொறியியல் பிரிவில் பணியாற்றிய அதிகாரி ஒருவரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்தே குறித்த அதிகாரி பணியாற்றிய இடத்தில் இருந்த ஏனைய அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 43 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியாவில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களிடம் கடந்த 2 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. இந்நிலையில் இன்று பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகின.

இதில் மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில், கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கும், பிரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவருக்கும் கொரோனா தொற்றியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்தில் உள்ள பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த நபரொருவரின் வீட்டில் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வில் இவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன் மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மஸ்கெலியா பகுதியில் இதுவரை 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான இருவரும் கடும் சுகாதார பாதுகாப்புடன் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.