
அரசியல் கைதிகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது சிறைச்சாலைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிக்குமாறு சுரேன் ராகவன் நீதி அமைச்சரிடம் கேட்டுள்ளார்.
2021 ஜூலை 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் இது தொடர்பாக அரசாங்கத்தின் பதிலை எதிர்பார்ப்பதாக சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் பாராளுமன்ற விவாதமொன்றையும் ஒழுங்கு செய்யுமாறும் அவர் நீதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
யுத்த காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் பலர் படிப்படியாக கடந்த ஆட்சிக் காலங்களில் விடுவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது எஞ்சியிருப்பவர்களையும் சட்டத்தின் முன்னிறுத்தி பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களை சமூகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்க வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் நல்லிணக்கமொன்றை ஏற்படுத்தும் நோக்கில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய குழுவொன்றினை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் குழுவினுடைய ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொண்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்குமாறும் சுரேன் ராகவன் நீதி அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளார்.