ஐக்கிய நாடுகள் சபையின் நியூ யோர்க் தலைமையகத்துக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயரை அரசாங்கம் முன்மொழிந்திருந்த நிலையில், உயர் பதவிகளுக்கான பாராளுமன்ற குழு நேற்று அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னாள் நீதியரசர் மொஹானுக்கான நேர்காணல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கான தற்போதைய தூதுவர் மற்றும் வதிவிட பிரதிநிதி ஷேனுகா செனவிரத்ன இலங்கை வெளிவிவகார சேவைக்கு மீளழைக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தரஸுக்கு அறிமுகச் சான்றிதழ்களைக் கையளித்த பின்னர் இலங்கையின் வதிவிட பிரதிநிதியாக முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸ் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார்.
இதேநேரம், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்துக்கான வதிவிட பிரதிநிதியாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சீ.ஏ.சந்ரப்பிரேம நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.